புதுடில்லி
மாவட்ட நீதிபதிகளை உத்தரவுகளில் பகிரங்கமாக விமர்சிக்கும் போக்கை உயர் நீதிமன்றங்கள் கைவிட வேண்டும் என்றும், இப்படியான கருத்துகள் மாவட்ட நீதித் துறையின் மன உறுதியை பாதித்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் பணியையும் பாதிக்கக்கூடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குத்தகை தொடர்பான குற்றவியல் வழக்கில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமினை கொல்கட்டா உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அந்த உத்தரவின் போது மாவட்ட நீதிபதியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப காரணங்களை மட்டும் முன்வைத்து ஜாமினை ரத்து செய்தது நியாயமானதல்ல எனக் குறிப்பிட்டது. மேலும், மாவட்ட நீதிபதியை உத்தரவிலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டும் வகையில் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தது.
மாநிலத்தின் பதிவு நீதிமன்றமாக உள்ள உயர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகளுக்கு காப்பாளராக செயல்பட வேண்டும்; குறைபாடுகள் இருந்தால் அவற்றை கையாள தனிப்பட்ட செயல்முறைகள் மூலம் சுட்டிக்காட்டலாம்; ஆனால் இழிவுபடுத்தும் அல்லது பாதகமான கருத்துகளை பதிவு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த வழக்கில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமினை உச்சநீதிமன்றம் வழங்கியது.




