தே.மு.தி.க., பொதுச்செயலரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர்களின் மூத்த மகன் விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். சமீப காலமாக பிரேமலதா வெளியிடும் சில கருத்துகள் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்குள் சங்கடத்தை ஏற்படுத்துவதாக பேசப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரேமலதா, மலை மீது “முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும்” என கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் அதிருப்தி தெரிவித்து, பிரேமலதாவையும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தனர். இது வாய்தவறி வந்த பேச்சு என பிரேமலதா தரப்பில் கூறப்பட்டாலும், அதை சமூக தலைவர்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில், விருத்தாச்சலம் தொகுதியில் மசூதிகளில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, முஸ்லிம்களுடன் தந்தை விஜயகாந்த் நெருக்கமாக இருந்ததாகவும், தானும் சிறுவயதிலிருந்தே அந்த சமூகத்துடன் நெருக்கம் கொண்டதாகவும் கூறினார்.
மேலும், தனது “இன்னொரு பெயர்” சவுகத் அலி என்றும், முஸ்லிம்களுடன் உள்ள நட்பின் காரணமாக தந்தை விஜயகாந்த் அந்த பெயரை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் தந்தையை வெற்றி பெறச் செய்ததைப் போல, இந்த முறை தாயான பிரேமலதாவையும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்ட அவர், தொகுதியை குடும்பத்தைப் போல பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார்.





