கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய தொகுதிகள் இதில் இடம்பெறுகின்றன.

முதலில் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது பொதுக்கூட்டம் ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகேயுள்ள காலி இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், முன் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு ஓசூரிலிருந்து வருபவர்கள் 25 கி.மீ.க்கும் மேல் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், ஓசூர் பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்த ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி அமைக்கவில்லை என்ற ‘சென்டிமென்ட்’ பேசப்படுவதையும் குறிப்பிட்டு, அந்த எண்ணத்தை மாற்றும் நோக்கிலும் ஓசூருக்கே கூட்டம் மாற்றப்பட்டதாக கூறினர்.