தமிழகத்தில் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த நாளிலிருந்து தற்போது ஐந்து நாட்களுக்குள் சிலிண்டர் வீடுகளுக்கு வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு முன்பு வினியோகம் இரு வாரம் வரை தாமதமானதால் பல குடும்பங்கள் சிரமம் சந்தித்தன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏஜென்சிகள் மூலம் 14.2 கிலோ வீட்டு சிலிண்டரும், 19 கிலோ வணிக சிலிண்டரும் வழங்குகின்றன. வழக்கமாக முன்பதிவு செய்த 2–3 நாளில் வினியோகம் முடிந்த நிலையில், சென்னையில் பல நேரங்களில் இரு நாளுக்குள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்காசிய நாடுகளில் மார்ச் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் காரணமாக, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு வரும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தட்டுப்பாடு உருவாகி வினியோகம் தாமதமானது. இதன் தொடர்ச்சியாக, ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பிரிவுகளுக்கு மார்ச் 9 முதல் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதுடன், வீட்டு வாடிக்கையாளர்களுக்கான மீண்டும் முன்பதிவு இடைவெளியும் நகரங்களில் 21 நாளில் இருந்து 25 நாளாகவும், கிராமங்களில் 45 நாளாகவும் உயர்த்தப்பட்டது.

வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ‘ஹார்முஸ்’ ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்ததால் வரத்து மேம்பட்டது. இதையடுத்து வணிகப் பிரிவுக்கான வினியோகம் 70% அளவுக்கு உயர்த்தப்பட்டதாகவும், தமிழகத்தில் மூன்று நிறுவனங்களுக்கும் சேர்த்து தினசரி 5,880 டன் திறன் கொண்ட 19 நிரப்பும் மையங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது சுமார் 25 நாட்களுக்கு இருப்பு உள்ள நிலையில், பீதியால் ஒரே நேரத்தில் அதிக முன்பதிவு செய்வது குறைந்ததால், வீடுகளுக்கு ஐந்து நாளுக்குள் வினியோகம் சீரடைந்துள்ளதாக கூறினர்.