விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன், “சினிமா மோகம் இல்லை என்பதை இந்த தேர்தல் களத்தில் நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும்” என்று வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். அவர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் முக்கியத்துவம் பெற்றதுபோல், இன்றைய அரசியல் களத்தில் “10 தொகுதியும், 8 தொகுதியும்” வெற்றி பெற வேண்டும் என்றும், விருத்தாசலத்தில் வெற்றி அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், விசில் அடிக்கும் ஆதரவாளர்களை குறிப்பிட்டு, சட்டசபையில் விசில் அடிக்க முடியாது; தியேட்டரில்தான் விசில் அடிக்க முடியும் என கூறி, அவர்களை “மீண்டும் தியேட்டருக்கு அனுப்புங்கள்” என்றார். ஒரு ஓட்டும் சிதறாமல் இருக்க வேண்டும் என்றும், கிராமங்களில் பேசி இளைஞர்களை ‘முரசு’ சின்னத்துக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டார்.

பட்டியலினத்து இளைஞர்கள் சினிமா மோகத்தால் விஜய் பின்னால் போகிறார்கள் என்ற பேச்சுகளையும் அவர் சுட்டிக்காட்டி, நாம் ஹீரோ மயக்கத்தில் இருப்பவர்களா என கேள்வி எழுப்பினார். “நீங்கள் கொள்கை வாரிசுகள்” என கூறிய அவர், வாக்கின் மூலம் அரசியல் உறுதியை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.