ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை கட்சியினர் அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ 18 வயது பூர்த்தியடையாத சில சிறுவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய்க்கு ஓட்டு போட என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

தேர்தல் கமிஷன் வழங்கும் “பூத் சிலிப்” கிடைத்தால் போதும் என்று கூறப்பட்டதால், அவர்கள் தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களை நேரிலும், மொபைல் போனிலும் தொடர்பு கொண்டு பூத் சிலிப் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த அலுவலர்கள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கும் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும் என்று விளக்கி புரிய வைக்க முயன்றுள்ளனர். அதற்கு சிறுவர்கள் “அப்படியென்றால் முதலில் வாக்காளர் அட்டையாவது கொடுங்கள்” என்று கேட்கிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் சேர 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதற்கான கால அவகாசமும் முடிந்துவிட்டதாக அலுவலர்கள் கூறியதாக தகவல். இதனால் கடுப்பான சிறுவர்கள், சர்கார் படத்தில் ஓட்டுரிமை குறித்து விஜய் பேசிய வசனங்களை கூறிவிட்டு அழைப்பை துண்டிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.