சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ வேட்பாளர் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்மொழிந்தவர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் தவெக நேரடியாகப் போட்டியிடாத சூழல் உருவானது.

இந்த விவகாரம் தொடர்பாக அருண்குமார் கடத்தப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. மேலும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, வேட்பாளர் துரோகம் செய்ததாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் வெளியிட்ட அறிக்கையில், பிரேம்குமார் முன்பு ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக இருந்தவர் என்றும், “நம்முடைய சகோதரர்” என்றும் விஜய் குறிப்பிட்டார். தற்போதைய தேர்தலில் பிரேம்குமாரையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் தவெக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் கமிஷன் வழங்கிய வரிசை எண் 12-ல் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட விஜய், கட்சி நிர்வாகிகளும் எடப்பாடி மக்கள் அனைவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவெக சின்னத்தை முடக்கி “குறுக்கு வழியில்” வெற்றி பெற முயன்றவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த வெற்றி அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.