விருதுநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில்தான் விபத்து நடந்தது. கோவிந்தநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துமாணிக்கம் என்பவருக்கு இந்த ஆலை சொந்தமானது என்றும், உரிய அனுமதியுடன் செயல்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆலையின் நான்கு அறைகள் சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு குழுக்கள் மீட்பு பணியில் இணைந்தன. முதற்கட்ட விசாரணையில் பட்டாசு தயாரிப்பு பணியின் போது ஏற்பட்ட உராய்வால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லவும், மாவட்ட ஆட்சியர் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.





