விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நெடுகனேந்தல் கிராமத்தில், ஓட்டு சேகரிக்க வந்த அமைச்சர் தங்கம் தென்னரசை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சூழ்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த தி.மு.க. நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
திருச்சுழி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தங்கம் தென்னரசு, நரிக்குடி அருகேயுள்ள நெடுகனேந்தல் கிராமத்திற்கு பிரசாரத்தின் ஒரு பகுதியாக சென்றார். அப்போது மக்கள் அவரை சுற்றி நின்று, தொகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த முக்கிய பணியும் செய்யப்படவில்லை என்றும், தற்போது ஓட்டு கேட்க மட்டுமே வந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை, நல்ல நிலையில் இருந்த பாலத்தை உடைத்து கட்டி முடிக்காமல் விட்டுள்ளனர், குடிநீர் தொட்டி அழுக்காக உள்ளது; அதிலிருந்து வரும் தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலை எனவும் புகார் தெரிவித்தனர்.
அருகிலிருந்த தி.மு.க. நிர்வாகி தடுக்க முயன்றபோது, “எங்களை பேச விடுங்கள்” என மக்கள் வலியுறுத்தி பதில் கேட்கத் தொடர்ந்தனர். ஆனால் அமைச்சர் எந்த பதிலும் அளிக்காமல் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த மக்கள், பிரசாரத்தின் போது வழங்கப்பட்டதாக கூறப்படும் ₹8,000-க்கான ‘போலி கூப்பன்’ சீட்டுகளை அங்கேயே கிழித்து வீசி எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், “ஐந்து நிமிடம் நின்று குறைகளை கேட்க முடியாதவர் அடுத்த ஐந்து ஆண்டுகள் எங்களை எப்படி கவனிப்பார்” என கேள்வி எழுப்பி, தி.மு.க.-க்கு ஓட்டு போட மாட்டோம் என முழக்கமிட்டனர்.





