துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்.19) இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இலங்கை பயணம் இதுவாகும்.
கொழும்புவில் அவர் இலங்கை அதிபர் அனுரா திசநாயகா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்து பேச உள்ளார். மேலும், இந்திய வம்சாவளி தமிழ்ச் சமூகத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் வடக்கு–கிழக்கு மாகாணங்களின் தமிழ் தலைவர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்புவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றவும், திட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் திட்டங்களை தொடங்கி வைக்கவும் உள்ளார்.
இந்திய மத்திய அரசின் உதவியுடன் இலங்கைத் தமிழ் சமூகத்தினருக்காக கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான திட்டத்தில், மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கான வீடுகளை அவர் ஒப்படைக்க உள்ளார். நாளை நுவரேலியாவுக்கு செல்லும் அவர், இந்திய அரசு உதவியுடன் அங்கு கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டு, உள்ளூர் தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட உள்ளார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘மஹாசாகர்’ திட்டத்தின் முக்கிய பங்குதாரராக இலங்கை இருப்பதாகவும், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.





