ஆலங்குளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் எம்பி பிரபாகரன் பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரபாகரன் அதிமுக சார்பில் போட்டியிடுவதாகவும், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் பேசியதாக கூறப்படும் காட்சியே தற்போது வெளியானதாக கூறப்படுகிறது.

வீடியோவில், ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும், திமுக ஆதரவாளர்களுக்கு மட்டும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், காங்கிரஸ் சார்பினருக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. யார் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும்; தேவையான அளவு பணம் வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறியதாக அந்தக் காட்சியில் உள்ளது.

மேலும், 50 ஓட்டுகள் கூட வெற்றி–தோல்வியை தீர்மானிக்கலாம் என கூறி, ராதாபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை 40 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எடுத்துக்காட்டியதாகவும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.