தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்து, “பள்ளி செல்லும் குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார்” என்று குற்றம்சாட்டினார்.

தன் அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் ஆங்கில உரையை செல்வப்பெருந்தகை தமிழில் மொழிபெயர்த்தபோது, ராகுல் பேசியதுடன் தொடர்பில்லாத கருத்துகளைச் சேர்த்ததாக அண்ணாமலை கூறினார். இதை ராகுல் காந்தி பின்னர் அறிந்ததாகவும், இனி தன் கூட்டங்களுக்கு செல்வப்பெருந்தகையை அருகில் விட வேண்டாம் என உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ராகுலின் இன்றைய கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற உண்மை வெளிவந்தால் அவமானமாகும் என்ற பதட்டத்தில், நேற்று காலை தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகமாடியதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

ஆனால், சோதனை நடந்ததாக கூறியது முழுப் பொய் என்று வருமானவரி துறை தெளிவுபடுத்தியதாகவும், பின்னர் செல்வப்பெருந்தகை வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்ததாலும் அவர் கூறியது பொய் என்பது உறுதியானதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும், அடிப்படை தகவல்களைக் கூட சரிபார்க்காமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு பதிலளித்ததாகவும், இது தேர்தல் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.