ஏப்.21 மாலை 6 மணி முதல் ஏப்.23 ஓட்டுப்பதிவு முடியும் வரை எந்த வடிவிலும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 2026 தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.23 அன்று நடைபெற உள்ள நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பில், 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126வது பிரிவின் கீழ் இந்த “மௌன கால” விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவும் நடத்தவும் பங்கேற்கவும் அனுமதி இல்லை. மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் வழியாகவும், குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் தொடர்பு வடிவங்களிலும் தேர்தல் உள்ளடக்கங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிகள், திரையரங்கச் செயல்பாடுகள் அல்லது பிற கேளிக்கை/பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் தேர்தல் பரப்புரை செய்வதும் தடை என கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் 1951 சட்டத்தின் 126(2) பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப்.21 மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்யாணமண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என சோதனை நடத்தப்படும்; நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் அந்த நேரத்திற்குப் பிறகு செல்லாது, மேலும் ஓட்டுப்பதிவு நாளில் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட வாகன அனுமதிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





