தமிழகத்தில் ஏப்.23 அன்று நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளுக்கான சில நடைமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அதன்படி, ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட வரும் வாக்காளரின் அடையாளம் குறித்து ஓட்டுச்சாவடி முகவர் ஆட்சேபனை தெரிவித்தால், அதை ‘சேலஞ்ச்’ ஓட்டாக எடுத்துக் கொண்டு முகவரிடமிருந்து ரூ.2 கட்டணமாக பெற்றுக் கொண்டு ரசீது வழங்க வேண்டும்.

பின்னர் நடைபெறும் விசாரணையில் அந்த ஆட்சேபனை தவறு எனத் தெரிய வந்தால், வாக்காளரை இயந்திரத்தில் ஓட்டுப்போட அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் முகவரிடமிருந்து பெற்ற ரூ.2 திருப்பி வழங்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆட்சேபனை சரி என நிரூபிக்கப்பட்டால், ரூ.2 தொகையை முகவருக்கு வழங்க வேண்டும். மேலும் போலி வாக்காளரை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுப்போட வரும் ஒருவர் தோற்றத்தில் 18 வயதுக்கு குறைவாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால், ‘டிக்ளரேஷன் அபவுட் ஏஜ்’ (இணைப்பு-7) படிவத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஓட்டுப்போட அனுமதிக்கலாம். ஓட்டுப்பதிவு தொடங்கும் முன், 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128ன் படி ஓட்டுப்பதிவின் ரகசியத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தலைமை அலுவலர் அறிவிக்க வேண்டும்; மேலும் சாவடிக்குள் விரல் அல்லது உடல் அசைவுகள் மூலம் குறிப்பிட்ட சின்னத்திற்கு ஆதரவாக தூண்டும் வகையில் யாரும் செயல்படக் கூடாது, வாக்காளரும் தாம் யாருக்கு ஓட்டு போட்டது என்பதை வெளிப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.