சீனாவில் உயிரிழந்த ஒருவரின் கல்லறை அருகே சொகுசு காரை புதைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரூ.1.5 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார், கல்லறைக்கு அருகே தனியாக குழி தோண்டி புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு லியோனிங் மாகாணத்தின் வாகோவ் (வாஃபாங்தியான்) பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் உயிரிழந்த 70 வயது பணக்காரருக்கு சொகுசு கார்கள் மீது அதிக விருப்பம் இருந்ததால், பாரம்பரிய முறையாக குடும்பத்தினர் இந்த செயலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான வீடியோ பதிவு வேகமாக பரவியதைத் தொடர்ந்து பலர் கடும் விமர்சனம் செய்தனர். பொருளாதார சிரமங்கள் உள்ள சூழலில் இத்தகைய செலவு வீணடிப்பு என்றும், இது சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தக்கூடும் என்றும் குற்றம்சாட்டினர்.

சிலர் இதை மரியாதை செலுத்தும் செயல் என ஆதரித்தாலும், பலர் இது மிகையான ஆடம்பரம் என குறிப்பிட்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், சீன அரசு குடும்பத்தினரை விசாரித்து எச்சரிக்கை விடுத்ததுடன், இதை நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கை எனக் கூறி பொது மன்னிப்பும் கேட்க வைத்தது. சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அபராதம் விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.