ஐந்து மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் பிரசார உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் கடும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதம் அல்லது தவறான தகவல் கொண்ட பதிவுகள் கண்டறியப்பட்டால், அவற்றை மூன்று மணி நேரத்திற்குள் அகற்ற அரசியல் கட்சிகளும் சமூக ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் ஏ.ஐ. உருவாக்கிய அல்லது டிஜிட்டல் முறையில் மேம்படுத்திய புகைப்படங்கள்/வீடியோக்களில், “ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது” அல்லது “டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது” என்ற குறிப்பு கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்றும் கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், அந்த உள்ளடக்கத்தை உருவாக்கிய நபர் அல்லது நிறுவனம் குறித்த விவரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ, தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையிலோ வெளியாகும் பதிவுகளை தகவல் தொழில்நுட்ப சிறப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர “அமைதி காலத்தில்” சமூக ஊடகம், டிவி, ரேடியோ ஆகியவற்றில் தேர்தல் தொடர்பான பிரசாரப் பொருட்களை வெளியிட தடை தொடரும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் புதுச்சேரி, அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்குகிறது. புதுச்சேரி, அசாம், கேரளாவில் ஏப்.9 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் மே 4 அன்று வெளியாகின்றன.





