தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக தேர்தல் களப்பணியை தீவிரப்படுத்த 65க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021 தேர்தலில் விவசாயிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தி.மு.க., விவசாயிகளுக்காக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். 83 வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும், மீதமுள்ளவை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும், விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலம் எடுக்கப்படாது என்ற உறுதிமொழிக்கு மாறாக, சிப்காட் திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். 40 சிப்காட் திட்டங்களுக்காக 1.10 லட்சம் ஏக்கர் நிலம் குறைந்த விலையில் கைப்பற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இனாம் நிலங்களின் மதிப்பை ‘பூஜ்ஜியம்’ ஆக்கி நில உரிமை பாதிக்கப்பட்டதாகவும், திருவண்ணாமலையில் விளை நிலங்களை காக்க அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், தி.மு.க. மாநாட்டிற்காக சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதை கண்டித்தவர்கள் மற்றும் கறிக்கோழி கூலி உயர்வு கோரி போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த காரணங்களால் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில், 65க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.