தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் முறைகேடு ஏற்பட்டதாக கூறும் மனு தொடர்பாக, வருமான வரித்துறை பதில்மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இரு தொகுதிகளுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூர் வேட்புமனுவில் விஜய் தனது சொத்து மதிப்பை ரூ.115 கோடி எனவும், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் ரூ.220 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், தெரிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்பதை வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஒரு தொகுதியில் காட்டிய அளவிலான வருமானத்தை மற்றொரு தொகுதியில் மறைத்ததாக இருந்தால் அது சட்டவிரோதமும் முறைகேடுமாகும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சுமார் ரூ.100 கோடி மறைத்ததாக கூறப்படும் விவகாரம் முறைகேடு எனவும் குறிப்பிட்டு, விசாரணை நடத்தி பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டனர்.





