டெஹ்ரானில், அமெரிக்காவுடனான தொடர்புகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டும் வாய்ப்பு “இன்னும் வெகு தொலைவில்” இருப்பதாக ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்தார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையிலான போர் பிப். 28ல் தொடங்கியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமைதி பேச்சுக்காக இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் சுற்று பேச்சு எந்த உடன்பாடும் இன்றி முடிந்தது.
இரண்டாம் சுற்று பேச்சுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் மூன்று நாள் அரசு முறை பயணமாக ஈரானுக்கு சென்று, அதிபர் மசூத் பெஷெஸ்கியான், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் சபாநாயகர் காலிபாப் உள்ளிட்டோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சை தொடங்க தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், ஈரான் சில நிபந்தனைகளை ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதால், அதற்குள் நிரந்தர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மீண்டும் போர் வெடிக்கும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
காலிபாப், நீடித்த போரில் ஈரான் வெற்றி பெற்றதாகவும், ஈரானின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலேயே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையின் கட்டுப்பாடு ஈரானிடமே இருப்பதாகவும் தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுக்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை என ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் காதிப்ஸாதே கூறிய நிலையில், சி.என்.என். தகவலின்படி இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஈரானின் நடவடிக்கைகள் அமெரிக்காவை “மிரட்ட” முடியாது என்றும், அமெரிக்கா கடினமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.





