ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களை நோக்கி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலானது என ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முன் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அமெரிக்க கடற்படை ஈரானின் துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் அறிவிப்புக்குப் பிறகு, ஜலசந்தியை நோக்கிச் சென்ற 20 சரக்கு கப்பல்கள் ஓமன் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த சூழலில், ஈரான் ராணுவ படகுகள் சில எண்ணெய் கப்பல்களை நோக்கி நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது; இதில் இரண்டு இந்தியக் கப்பல்களும் அடங்கும். அவை மொத்தம் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகவும், கப்பல்களுக்கும் பணியாளர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா ஈரானின் தூதரை வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் மூலம் கடும் கண்டனம் தெரிவித்தது. பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், அந்த வழியாக செல்லவிருந்த 21 இந்தியக் கப்பல்களின் விவரங்களை முன்கூட்டியே ஈரானிடம் பகிர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது; இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடந்ததால் கப்பல்கள் திரும்பிச் செல்ல நேரிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான ஈரான் தூதர் டாக்டர் முகமது பதாலி, இது தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்ட தற்செயலான சம்பவம் என இந்திய அரசிடம் விளக்கம் அளித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் தடையின்றி பயணிக்க ஈரான் தலைமையகத்திடமிருந்து உறுதியான உறுதிமொழி பெற்றுத் தருமாறு இந்திய அரசு வலியுறுத்தியது.