டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி (86) உயிரிழந்து 50 நாட்களுக்கும் மேலாகியும், அவரது இறுதி சடங்கு மற்றும் உடல் அடக்கம் இன்னும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாமதத்திற்கு பின்னணி, கடந்த பிப். 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் என கூறப்படுகிறது. போரின் முதல் நாளிலேயே கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் அரசு மரியாதையுடன் பிரமாண்டமாக இறுதி சடங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பெரிய கூட்டம் கூடும் நிகழ்வை குறிவைத்து மீண்டும் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனால் பாதுகாப்பு காரணமாக இறுதி சடங்கு தள்ளிப் போடப்படுவதாக கூறப்படுகிறது. அதுவரை கமேனியின் உடல் பதப்படுத்தப்பட்டு ரகசியமான பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.