காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய அலுவலகத்தில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் கூறுகையில், அலுவலகத்தில் ரூ.13 லட்சம் 40 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், அலுவலக நிர்வாகிகள் இருவர் பணப்பையைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் துரத்த அதிகாரிகள் முயன்றபோது, அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் பறக்கும் படை வாகனத்தின் சாவியைப் பிடுங்கியதால் துரத்தல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஏஎஸ்பி ஆசிஸ் புனியா மற்றும் தாசில்தார் ராஜா இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கினர். வாகன சாவியைப் பறித்ததாக கூறப்படும் பழனியப்பன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், பணத்துடன் தப்பியவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.