கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ஜார்கிராமில் சாலையோர கடையில் நின்று மாநிலத்தின் பிரபலமான ‘ஜல்முரி’ சிற்றுண்டியை வாங்கி ருசித்த பிரதமர் நரேந்திர மோடியின் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.
தகவலின்படி, பிரசார கூட்டத்திற்குச் செல்லும் வழியில் அவரது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த கடைக்கு சென்றார். அங்கு கடை உரிமையாளருடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் ஜல்முரியை வாங்கினார்.
வாங்கிய பொருளுக்கான பணத்தை பிரதமர் வழங்கியபோது, கடைக்காரர் முதலில் மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பிரதமர் வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் பணத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது; அதே நாளில் பிரதமர் மாநிலத்தில் நான்கு இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசினார்.
ஜல்முரி என்பது மிக்சர், கடலை, பொரி, வெங்காயம், வெள்ளரி, தக்காளி உள்ளிட்டவற்றை மசாலாவுடன் கலந்து தயாரிக்கும் சிற்றுண்டி ஆகும்.





