தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், தி.மு.க. அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் பகிரங்கமாக ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். சென்னை உயர் நீதிமன்றம் தி.மு.க. அமைச்சர் ஒருவரையும் அவரது மனைவியையும் குற்றவாளி என கூறியதாகவும், சட்டவிரோத கனிம வளக் கொள்ளை மூலம் 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்மீது கிட்னி கடத்தல் புகார் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறினார். அந்த விவகாரத்தை முன்வைத்து தி.மு.க.வை விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து அப்பாவிகள் உயிரிழந்ததற்கு தி.மு.க. அரசே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார். தி.மு.க. ஹிந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகவும், முருக வழிபாட்டு உரிமையை பறிப்பதாகவும் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற விடாமல் தடுக்கப்படுவதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அது செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதனால், தங்கள் ஆட்சி அமைந்ததும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என கூறிய அவர், பார்லிமென்டில் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரிக்காமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.