பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் தொடர்ந்து நிகழும் வெடிவிபத்துகள் “வாடிக்கையான செய்தி” ஆகிவிட்டதாகவும், அரசும் அதிகாரிகளும் அலட்சியமாக நடந்து கொள்வதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்ததாக கூறி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இத்தகைய சம்பவங்களுக்கு விதிமீறலும் பாதுகாப்பின்மையும் முக்கிய காரணங்கள் எனக் கூறிய அவர், “விபத்து” என்ற பெயரில் பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்வதாகவும் விமர்சித்தார். கடந்த 25 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகள், கடைகள், கிடங்குகளில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல நூற்றுக்கணக்கானோர் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இனி இப்படியான உயிரிழப்புகள் தொடராமல் இருக்க, பட்டாசுத் தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி மறுவாழ்வுக்கு உதவுவது நிலைத்த தீர்வாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார். மேலும் கட்டனார்பட்டி விபத்துக்கான உண்மைக் காரணத்தை கண்டறிய உடனடி நீதி விசாரணை நடத்தவும், தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து உறுதிப்படுத்தவும் கோரினார்.
அத்துடன், உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் உரிய உயர் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை அவர் வலியுறுத்தினார்.




