பிரசாரம் நாளையோடு முடிவடைய உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் சில முக்கிய முகங்கள் இந்த முறை கடும் தள்ளாட்டத்தில் இருப்பதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. சிலர் வெற்றி பெற்றால் ஆச்சரியம் எனவே அந்தந்த கட்சியினரே கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில், தி.மு.க. பொதுச்செயலரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தப்பியதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லை என்ற விமர்சனங்களும், மகன் கதிர் ஆனந்தின் செயல்பாடு குறித்து கட்சிக்குள் உள்ள அதிருப்தியும் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், அமைச்சர் மதிவேந்தன் மீது தொகுதிக்குள் அதிருப்தி இருப்பதாகவும், கட்சிக்குள் உள்ள குழு மோதல்கள் தேர்தல் களத்தை மேலும் கடினமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிலையில், இந்த முறை பா.ஜ.க. வேட்பாளராக பிரேம்குமார் களமிறங்கியிருப்பதும் சவாலாக பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழக்கம்போலவே கடும் போட்டியை எதிர்கொள்வதாக தி.மு.க. தரப்பில் பேசப்படுகிறது. சமூக ஆதரவு சமநிலைகள் மாறக்கூடும் என்ற கணிப்புகளும், நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில நிர்வாகிகள் கூறுவதும் குறிப்பிடப்படுகிறது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு சமூக அடிப்படையிலான செல்வாக்கு வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், நீண்ட காலமாக அதே தொகுதியில் அவர் பிரதிநிதியாக இருப்பது குறித்தும் விவாதங்கள் எழுகின்றன.