வாஷிங்டன்: அமெரிக்க அரசின் ‘டிப்ஸ்களுக்கு வரி இல்லை’ கொள்கை சட்டமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஓவல் அலுவலகத்திற்கே தன் விருப்பமான மெக்டொனால்ட்ஸ் உணவுகளை ஆர்டர் செய்து வரவழைத்தார்.

2024 தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த கொள்கை கடந்த ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஏப்.13 அன்று ‘டோர் டேஷ்’ ஆன்லைன் தளம் மூலம் சீஸ் பர்கர், ப்ரைஸ் உள்ளிட்டவற்றை அவர் வரவழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெலிவரியை ஆர்கன்சாஸைச் சேர்ந்த டோர் டேஷ் ஓட்டுநரும் குடியரசுக் கட்சி ஆதரவாளருமான ஷரோன் சிம்மன்ஸ் நேரில் ஓவல் அலுவலகத்திற்கு சென்று டிரம்பிடம் வழங்கினார். இதற்கான படங்கள், வீடியோக்களை டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், இத்தகைய விளம்பர நடவடிக்கைகள் சிலருக்கு தரம் குறைந்ததாகத் தோன்றலாம் என்றாலும், அரசியலில் இப்படி ‘சில நாடகங்கள்’ நடத்துவது மிகவும் சாதாரணம் என கூறினார்.

ஷரோன் சிம்மன்ஸ் ஏற்கனவே இந்த கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், இது திட்டமிட்ட நாடகம் என சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டிரம்பின் இந்த ‘பர்கர்’ பிரசாரம் தற்போது அமெரிக்காவில் விவாதப் பொருளாகியுள்ளது.