திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வெளியான தகவலுக்கு, முன்னாள் தமிழக பாஜ தலைவர் கே. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அதிர்ச்சியும் கோபமும் அளிப்பதாக அவர் கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி செய்யாறு அருகே ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத் தோல்வியை காட்டுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த ஆண்டுகளில் போதைப் பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதாகவும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின்மீதும் காவல்துறையின்மீதும் அச்சம் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் கூறி, தமிழகம் “இருண்ட நிலைக்கு” தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார். இவற்றைச் சரிசெய்து தமிழகத்தை மீட்டெடுக்க சில காலம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.