பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ‘இந்தியா எதையும் மறக்காது’ என்று இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் பின்னர் அந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டியதாக ராணுவம் குறிப்பிட்டது. பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.

அந்த பதிவில், மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும் போது இந்தியாவின் பதில் தீவிரமாகவும் கடுமையாகவும் இருக்கும் என்றும், நீதி நிலைநாட்டப்பட்டதாகவும், நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் ராணுவம் தெரிவித்தது. தேசப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எந்த சமரசமும் இல்லை என்பதையும் அது வலியுறுத்தியது.