புதுடில்லி: மேற்கு ஆசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், 85% எத்தனால் கலப்பு பெட்ரோல் (இ-85) தொடர்பான செயல்பாட்டு கொள்கையை மத்திய அரசு பரிசீலித்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலரைத் தாண்டியதாக கூறப்படுகிறது. விலை ஒரு டாலர் உயர்ந்தால்கூட இந்தியாவின் இறக்குமதி செலவு ரூ.16,000 கோடி வரை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இ-85 எரிபொருளில் 85% எத்தனாலும், 15% பெட்ரோலும் இருக்கும். தற்போது நாட்டில் இ-20 பெட்ரோல் பயன்பாட்டில் உள்ள நிலையில், எத்தனால் கலப்பு அளவை மேலும் உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர் சங்கங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவின் மொத்த எத்தனால் தேவை 1,100 கோடி லிட்டர் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி 2,000 கோடி லிட்டராக தேவையை மீறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இ-85 பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு முன், இ-85 வாகனங்களின் விலை, உற்பத்தி செலவு, எரிபொருள் கிடைப்புத்தன்மை, மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களில் தனிப்பட்ட வாகன சோதனைகள் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





