தமிழக துணை முதல்வர் உதயநிதி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான ஆர்.குமாரவேல் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்து விவரங்களுக்கும், 2021 சட்டசபைத் தேர்தல் காலத்தில் தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வருமானவரி துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன் ஆஜராகி, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.
மேலும், தற்போது தங்களிடம் உதயநிதியின் வருமானவரி கணக்கு விவரங்கள் மட்டுமே உள்ளதாகவும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், வருமானவரி துறைக்கு நான்கு வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.




