இந்தியா–தென் கொரியா இடையே “சில்லு முதல் கப்பல் வரை” என வர்ணிக்கப்பட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுஙை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுக்குப் பிறகு பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்ததாக தலைவர்கள் தெரிவித்தனர். பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

மோடி பேசுகையில், லீயின் முதல் இந்திய வருகை இருநாட்டு உறவுகளில் புதிய மைல்கல்லாகும் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் கூறினார். திறமை, தொழில்நுட்பம் முதல் சுற்றுச்சூழல், எரிசக்தி வரை பல தளங்களில் கூட்டாண்மை விரிவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் லீ, இந்தியா உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தி என்றும், இருநாட்டு வர்த்தகம் இன்னும் முழுத் திறனை எட்டவில்லை என்றும் கூறினார். 2030க்குள் வர்த்தக மதிப்பை இரட்டிப்பாக்கி சுமார் ரூ.4.15 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்காசியாவில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு எரிசக்தி வளங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வினியோகத்தை நிலைப்படுத்த இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார். கப்பல் கட்டுமானத்தை இணைந்து முன்னெடுக்க முடிவு செய்ததாகவும், டிஜிட்டல் துறையில் வலுவான நட்பு பாலம் அமைக்கும் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன; குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) டிஜிட்டல் ஒத்துழைப்புக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.