சென்னையில் வெளியிட்ட வீடியோ செய்தியில் நடிகரும் அரசியல் தலைவருமான கமல் ஹாசன், முதல்வர் மு.க. ஸ்டாலினை “கூட்டாட்சி தத்துவத்தின் காவல் வீரர்” என புகழ்ந்தார்.

தன்னை நடிகனாகவோ கட்சி தலைவராகவோ அல்லாமல், “தமிழகத்தில் வாழும், தமிழில் சிந்திக்கும் ஒருவராக” பேசுவதாக கூறிய கமல், இந்தத் தேர்தல் முன்னேற்றமா பின்னேற்றமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்றும், தெற்கு–வடக்கு என்ற கோணத்திலும் அதை விளக்கினார்.

தமிழகத்தின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் சென்னையில் எடுக்கப்பட வேண்டுமா, அல்லது டில்லியில் சொல்லிவிட்டு செய்தி வர வேண்டுமா என்பதையே இந்த வாக்கு தீர்மானிக்கும் என அவர் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டு வந்த திட்டங்களால் தமிழகம் பல துறைகளில் முன்னிலையில் இருப்பதாகவும், “திராவிட மாடல்” அரசு ஸ்டாலின் மீண்டும் ஆளத் தகுதியானவர் என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த கமல், காலங்கள் வேறாக இருந்தாலும் முழக்கம் ஒன்றே—தமிழும் தமிழ்நாடும் தலைவணங்காது என்றார். நலத்திட்டங்கள் தொடரவும், தமிழகம் உலக நாடுகளுக்கு இணையாக உயரவும் திமுக சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், உணர்ச்சி வசப்பட்டு வாக்களிக்காமல் யார் பாதுகாப்பார், யார் குரலுக்காக போராடுவார் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.