மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், திமுக நடைமுறைப்படுத்திய மகளிர் உரிமைத் தொகை திட்டமே திமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் பிரசாரம் செய்த அவர், மக்கள் பிரச்னை நேரத்தில் ஓடி வருவதே உண்மையான தலைமை; ஓடி போகக் கூடாது என்று பேசினார்.

தான் முன்பு கூறிய கருத்துகளில் ஒன்றை திமுக தற்போது செயல்படுத்தியுள்ளது என்றும், நாட்டில் பலர் பேசாத விஷயமாக அது இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சுட்டிக்காட்டிய கமல், நல்ல யோசனை எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை அரசியலில் முக்கியம் என்றார். அந்த அணுகுமுறையால்தான் 15 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக அமைந்துள்ளதாக கூறிய அவர், அந்த பெருந்தன்மையை பார்த்தே தானும் திமுக கூட்டணியில் இணைந்ததாக தெரிவித்தார்.