நாக்பூர் மாவட்டத்தில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்களில் பெண் ஊழியர்களை கட்டாயமாக மத மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனங்களின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகாரின்படி, ‘பிகர் பவுண்டேஷன்’ மற்றும் ‘பதே ஹம் பதாயே ஹம்’ என்ற தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் ரியாஸ் காஜி, பெண்களை இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற வற்புறுத்தியதாகவும், குறிப்பிட்ட மத சடங்குகளை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்கள் அளித்த புகாரை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று ரியாஸ் காஜியை கைது செய்தனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை எத்தனை பெண்கள் இவ்வாறு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் (ஏ.டி.எஸ்.) விசாரணையில் இணைந்துள்ளனர்.

மேலும், இந்த தொண்டு நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது, பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா என்பதையும் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.