சட்டசபை தேர்தலை முன்னிட்டு தே.ஜ. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தார். கோவையில் தனியார் ஹோட்டலில் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் பா.ஜ., அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் கோவையைச் சேர்ந்த முக்கிய தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அங்கு நாயுடு, “தி.மு.க. தோற்க வேண்டும்; தமிழகம் ஜெயிக்க வேண்டும்” என்ற கோஷத்தை முன்வைத்தார்.
ஆந்திராவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் டேட்டா சென்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட முயற்சிகளுக்காக முதலீடுகள் வந்துள்ளதாகவும், அமராவதியில் 2,500 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க திட்டமுள்ளதாகவும் அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்திற்காக 500 ஏக்கர் நிலம் வழங்க தி.மு.க. அரசு தயக்கம் காட்டுவதாகவும், தமிழகத்தில் ஐ.டி. துறை வீழ்ச்சியடைந்து முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும் நாயுடு குற்றம்சாட்டினார். மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சென்னை பொலிவை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான தி.மு.க. நிலைப்பாட்டை விமர்சித்து, இது தென் மாநிலங்களுக்கும் பெண்களுக்கும் அநீதி என தெரிவித்தார். 2027ல் மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் தென் மாநிலங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம் என்றும், அதற்கு தமிழகம் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.





