கொழும்பு: இலங்கைக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நல நடவடிக்கைகளை அறிவித்தார்.
சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளில் அவர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை சந்தித்து பேசினார். இதன் போது சுகாதாரம், சமூக மேம்பாடு, எரிசக்தி, புனர்வாழ்வு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கி இருதரப்புக்கும் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இலங்கை பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவை அவர் சந்தித்தார். இலங்கை கல்வித்துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
மேலும், இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை திட்டத்தை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மத்திய மாகாணத்தின் நுவரெலியாவில் இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த தமிழ் சமூகத்தினருடன் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.
பின்னர் சீதா அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர், அரசு முறை பயணத்தை நிறைவு செய்து டில்லிக்கு புறப்பட்டார்.





