ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜெர்மனிக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக புறப்படுகிறார் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தில் ஜெர்மனியின் ராணுவ அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத் தொழில் கூட்டணிகளை மேம்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த பயணத்தின் போது ராணுவ ஒத்துழைப்புக்கான வரைவு திட்டம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை பயிற்சி ஒத்துழைப்பை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்திய கடற்படைக்காக ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் அரசு-முறை ஒப்பந்தம் தொடர்பாகவும் பிஸ்டோரியஸுடன் முக்கிய ஆலோசனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 2023 ஜூனில் பிஸ்டோரியஸ் இந்தியா வந்ததைத் தொடர்ந்து நடைபெறும் இந்த பயணம், இரு நாடுகளின் ராணுவ உறவுகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.