மேற்கு வங்கத்தில் படிவம்-6 மூலம் சுமார் 7 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்ற வாய்மொழி கோரிக்கையை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை ஏற்க மறுத்தது.
மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) தொடங்கியதிலிருந்து வாக்காளர் பெயர் நீக்கம், சேர்க்கை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ச்சியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இதற்கு முன் தொடர்புடைய வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்திருந்தது. அந்த தீர்ப்பாயம் நீக்கம் மட்டுமின்றி சேர்க்கை தொடர்பான பிரச்சினைகளையும் பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டு, பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.
திரிணமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. மற்றும் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், தேர்தல் ஆணையம் தீர்ப்பாய அனுமதி இன்றி தன்னிச்சையாக சேர்க்கை செய்ததாக கூறினார். தீர்ப்பாய ஒப்புதல் இருந்தாலே சேர்க்கை அல்லது நீக்கம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை இது மீறுவதாகவும் அவர் வாதிட்டார்.
ஆனால், அந்த நிலையில் விவகாரத்தை எடுத்துக்கொள்ள மறுத்த தலைமை நீதிபதி, தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரணை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மேற்கு வங்கத்திலிருந்து வரும் புகார்கள், மனுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இதற்கென தனி அமர்வு அமைக்க வேண்டிய நிலை வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.





