சென்னை: தமிழகத்தில் உள்ள சுமார் 75,000 தி.மு.க. ஓட்டுச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அலைபேசி செயலி வழியாக ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தொகுதி மறுவரையறை தொடர்பான போராட்டத்தில் பெற்ற வெற்றி “டிரைலர்” மட்டுமே; இன்னும் பல போர்கள் முன் உள்ளன என்றும் கூறினார். சட்டசபையில் நாம் வலுவாக இருக்கும் வரை டில்லி தமிழகத்தின் உரிமைகளைத் தொட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பாக முகவரும் தங்களின் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நேரில் சென்று வாக்கு கேட்க வேண்டும்; தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் ஒன்று கூட விடுபடக் கூடாது என அவர் அறிவுறுத்தினார். மேலும், தன்னார்வலர்களை தயாராக வைத்திருந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்க அழைத்து வர ஏற்பாடுகள் செய்வது முகவர்களின் பொறுப்பு எனவும் கூறினார்.
எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் விதிமீறல் அல்லது முறைகேடு செய்ய முயற்சி செய்யலாம் என எச்சரித்த அவர், ஏதேனும் மீறல் நடந்தால் கட்டளை மைய எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றார். தேர்தலன்று கடைசி வாக்கு பதிவாகும் வரை ஓட்டுச்சாவடியில் இருக்க வேண்டும் என்றும், முடிவுகள் வந்தபின் ஓட்டுச்சாவடி வாரியாக வாக்குகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் ஓட்டுச்சாவடி முகவரை தானே நேரில் சந்திப்பேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.





