சென்னை: தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும் நிலையில், தமிழகம் மற்றும் தமிழ் மக்கள் மீது தன் பாசத்தையும், மாநிலம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம் திறந்து பேச விரும்புவதாகக் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தன்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட “ஆபத்தானவர்” என சிலர் விமர்சித்ததை நினைவுகூர்ந்த அவர், கருணாநிதியுடன் தன்னை ஒப்பிட முடியாது என்றார். அதே நேரத்தில், தமிழகத்தை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் தாம் எப்போதும் “ஆபத்தானவன்” தான் என்றும் அவர் கூறினார்.

“சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்” என வலியுறுத்திய ஸ்டாலின், பல மாநிலங்கள் எட்டாத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் தொட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னேற்றம் இருந்தாலும் சில குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், மக்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; அதன் விளைவுகள் விரைவில் தெரியும் என்றார்.

மேலும், பாஜ தலைமையிலான மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு முதலில் எதிர்ப்பு பதிவு செய்தது திமுக என்றும், மசோதா நகலை தாம் கொளுத்தியதாகவும் கூறினார். திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜ பொய்யான பரப்புரை செய்கிறது என்று குற்றம்சாட்டிய அவர், திமுக ஒருபோதும் இந்து விரோதி அல்ல என்றும், சிறுபான்மை மக்களுக்கு பிரச்னை வந்தால் திமுக களத்தில் நிற்கும் என்றும் தெரிவித்தார்.

எந்த பிரச்னை வந்தாலும் தமிழகத்தையும் தமிழர்களையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுத்த அவர், மீண்டும் நல்லாட்சி தொடர “உதய சூரியன்” சின்னத்திலும் கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.