புதுடில்லி: ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இதில் நன்கு கல்வியறிவு பெற்றவர்களும் எளிதில் ஏமாறுவது “அதிர்ச்சி அளிக்கிறது” என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் போலீஸ் உயரதிகாரிகள் போல தொலைபேசியில் பேசும் நபர்கள், ‘வீட்டு சிறையில் வைப்போம்’ என மிரட்டி, அதிலிருந்து விடுபட குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி வசூலிப்பதாக கூறப்படுகிறது. பயத்தில் பலர் பணம் செலுத்தி பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.
இந்த மோசடி தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. சமீபத்திய விசாரணையில், தமக்கு தெரிந்த மூதாட்டி ஒருவர் இந்த மோசடியில் சிக்கி முழு ஓய்வூதிய பலன்களையும் இழந்ததாக தலைமை நீதிபதி வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை மே 12க்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, டிஜிட்டல் மோசடிகள் மூலம் அப்பாவி மக்களிடமிருந்து சுமார் ரூ.54,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இத்தகைய மோசடிகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ‘டிஜிட்டல் கைது’ மோசடிகளை நாடு தழுவிய அளவில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.





