தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 21 அன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 23 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்குப் பிறகு பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்தவும், அதில் பங்கேற்கவும் கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் தொடர்பான எந்த உள்ளடக்கத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து மின்னணு தகவல் தொடர்பும் இதன் கீழ் வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் போன்ற இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என்பதை கண்டறிய சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் மாலை 6 மணி முதல் செயலிழக்கும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர அல்லது அங்கிருந்து அழைத்துச் செல்ல வாகனங்களை வாடகைக்கு எடுக்கவும், வாங்கவும், பயன்படுத்தவும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே, இரண்டு நபர்கள் மட்டுமே உள்ள வகையில் தேர்தல் அலுவலகம் அமைக்கலாம்; தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




