சென்னை: தமிழகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.1,212 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும் 136 பொது பார்வையாளர்கள், 40 காவல்துறை பார்வையாளர்கள், 150 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தேர்தல் பணிக்காக 83,875 போலீசார் மற்றும் 40,427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன், மத்திய ஆயுத பாதுகாப்புப் படையிலிருந்து 300 கம்பெனி வீரர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரை ரூ.169 கோடி ரொக்கம், ரூ.2.95 கோடி மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் ரூ.82.7 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரூ.650 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்ததாக கூறப்படும் ரூ.306 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.495 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




