துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இனி அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவு அவசியமில்லை; எனவே நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூட வேண்டும் என்று அந்நாட்டின் பிரபல அரசியல் விமர்சகர் தெரிவித்துள்ளார்.

அரசியல் அறிவியல் பேராசிரியரும் கருத்துரையாளருமான அப்துல்காலெக் அப்துல்லா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்தக் கருத்தை முன்வைத்ததாக தகவல் கூறுகிறது.

தாக்குதல்களுக்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாகவும், இதனால் அந்தப் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஈரானிய தாக்குதலின்போது தன்னால் தனித்துவமாக தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை எமிரேட்ஸ் நிரூபித்துள்ளதாக அப்துல்லா கூறினார். மேலும், அமெரிக்காவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை பெற விருப்பம் இருந்தாலும், அதற்காக அமெரிக்கத் தளங்கள் நாட்டில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அன்னிய நாட்டு தளங்களை நடத்துவதற்குப் பதிலாக, நவீன ராணுவத் திறன்களைப் பெறுவதற்கும், கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் சொந்த பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.