சென்னை: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய், வரும் ஏப்.23 அன்று ‘விசில் புரட்சி’க்கு தயாராகி, குடும்பம் குடும்பமாகச் சென்று வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். த.வெ.க-வின் ‘விசில்’ சின்னத்துக்கே ஆதரவு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழக மக்களுக்கு எழுதிய கடிதத்தில், மக்களிடம் பெற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்ததாக விஜய் குறிப்பிட்டார். அரசியலுக்கு வந்த நாள்முதல் பல்வேறு நெருக்கடிகள், நிர்பந்தங்கள் மற்றும் வேதனைகளை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜவை கொள்கை எதிரியாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனவிரோத சக்திகள் த.வெ.க-வை பலவீனப்படுத்த முயல்வதாக கூறிய விஜய், ஆதாயங்கள் காட்டி தன்னை அடக்க முடியாது என்றும், அதிகாரங்களை ஏவி மிரட்டவும் இயலாது என்றும் தெரிவித்தார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆதரவுடன், உலகெங்கும் உள்ள தோழர்களின் துணையுடன் த.வெ.க முதன்மை அரசியல் சக்தியாக களத்தில் இருப்பதாக அவர் கூறினார். அரசியலில் ஊழல் மற்றும் பணமழை பொழிந்தாலும், எந்த மறுசிந்தனையும் இன்றி ‘விசில்’ சின்னத்தையே ஒரே தேர்வாகக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.





