சென்னையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜய், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை “வீட்டுக்கு அனுப்பும்” தேர்தலாக இது இருக்கும் என்றும், திமுக தோல்வி உறுதி என்றும் தெரிவித்தார்.

திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றியதாக அவர் குற்றம்சாட்டினார். வீட்டுவரி, குடிநீர்வரி, தொழில் வரி உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாகவும், விலைவாசி உயர்வுடன் குப்பைக்கும் வரி விதிக்கப்பட்டதாகவும் கூறி, மக்களின் கஷ்டங்கள் அதிகரித்ததாக விமர்சித்தார்.

மேலும் தமிழகத்தில் எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய விஜய், சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அந்த அளவு தொகையால் இளைஞர்களின் கல்விக்கடன் ரத்து போன்ற நடவடிக்கைகள் செய்ய முடிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

விக்கிரவாண்டியில் கூறிய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், “அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜ” என்ற நிலை மாறவில்லை என்றார். தமிழகத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை யாராலும் குலைக்க முடியாது என்றும் கூறினார். திமுக தோல்விக்குப் பிறகு கட்சியை காப்பாற்ற பாஜவுடன் நெருக்கம் தேடும் நிலை வரும் எனவும், சிறுபான்மையினருடன் தான் நிற்பேன் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்கணிப்புகள் குறித்து விமர்சித்த விஜய், தொகுதி எண்ணிக்கைகள் மற்றும் வயது அடிப்படையிலான வாக்காளர் கணிப்புகள் “தில்லுமுல்லு” என சாடினார். தேர்தல் கமிஷன் வெளியிட்ட வாக்காளர் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி அந்தக் கணிப்புகளை மறுத்த அவர், எந்த கணிப்பாக இருந்தாலும் திமுகவும் “மற்றவர்களும்” தோல்வியடைவது உறுதி என கூறினார்.