கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் எனக் கோரி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் செவ்வாய்க்கிழமை கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் வாக்காளருக்கு ரூ.2,000வும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் ரூ.1,500வும் வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருவதாகவும், திமுகவினரும் கரூரைச் சேர்ந்தவர்களும் பணம் வழங்குவதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.

புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். தர்ணாவை கைவிட போலீசார் சமரச பேச்சு நடத்தியபோதும், அவர் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தர்ணாவால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவியது.