தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் இரட்டை இலக்க எண்ணிக்கையைக் கூட எட்ட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. பிரசாரம் முடிந்துள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார். டம்டம் உத்தர் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை கூட தொட முடியாது என்று கூறினார்.

மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும், பல மாநிலங்களில் அந்தக் கட்சி பின்னடைவுகளை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அசாமில் காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், காங்கிரசுடன் மம்தா பானர்ஜி வைத்துள்ள தொடர்பு அவரை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தும் என்றும், காங்கிரஸ் தலைமை மீது விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார். பிரதமரை கடுமையாக விமர்சிப்பது பாஜக வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.