கோவை கணபதி பகுதியில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரமாக, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று வாக்காளர்களை சந்தித்தனர்.
வானதியை ஆதரித்து நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி சிவசக்தி காலனியில் தொடங்கி, பாரதி நகர், விளாங்குறிச்சி சாலை, மணியகாரம்பாளையம், கண்ணப்ப நகர், கிருஷ்ணம்மாள் வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது. வழியெங்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
பேரணியின் போது வானதி ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றபடி, தாமரைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த பிரசாரம் கணபதி பகுதியில் கவனம் பெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேர்தல் கருத்துக் கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறினார். மத்திய அரசு நிதியை பயன்படுத்தக்கூடிய அரசு மாநிலத்துக்கு வேண்டும் என மக்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தி.மு.க. வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டதாகக் குற்றம்சாட்டி, செந்தில் பாலாஜியை குறித்தும் விமர்சனம் செய்தார்.
தேர்தல் கமிஷன் வலுவாக இருக்க வேண்டும்; போதுமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமித்து பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பு என அவர் கூறினார். கோவையிலிருந்து “வெளியூர்காரர்களை” வெளியேற்ற வேண்டும் என்றும், கோவை வடக்கு தொகுதியில் பணம் எவ்வளவு கொடுத்தாலும் வானதியை தோற்கடிக்க முடியாது; அவரது வெற்றி உறுதியாகிவிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.





